September 21, 2010

சிறிய இடைவெளிக்குப் பின்...

இரண்டு வாரமாக வலைப்பக்கம் வரமுடியாத நிலை. கடந்த 5 ந்தேதி மெதுவாக எட்டிப் பார்த்த ஜூரம் அடுத்து வந்த நாட்களில், டைய்பாய்டில் கொண்டு விட்டது. எதை சாப்பிட்டாலும் கசப்பு, எருமைமாடுகளுக்கு கொடுப்பது போல் எவ்வளவு பெரிய மாத்திரைகள். பதிவுலககமே நாம் எங்கே என்று தேடி??? மாய்ந்துபோனது???!!!! (ஜூரம் அதனால 1 வாரம் கழித்து வரேனு மெயில் அனுப்புனா, அங்கயும் கும்மியடிச்சி, கொலையா கொல்றானுக...நாதாரிக, மொள்ளமாரிங்க, முடுச்சவிக்கிக...).

சரி ஜுரம் சரியாகிடுச்சி ஒரு பதிவு போடலாம்னா, 2 வாரமா ஆஃபீஸ் போகாததால, தோட்டத்துல களை முளைச்சிருக்குறா மாதிரி அஃபீஸ்ல ஆணி பெருகி நிக்குது. இந்தமாசம், இன்கம்டாக்ஸ் + ROC க்கு, கம்பனி அக்கவுண்ட்ஸ் ஃபைல் பண்ணனும் அதுவேற. அதனால அடுத்த ரெண்டுவாரத்துக்கு பதிவு ஏதும் எழுதமுடியுமானு தெரியலை (ங்கொய்யாலே எப்ப நீ பதிவெழுதுவேனு, நாலு பேர் காத்திட்டு இருக்குறாமாறியே பில்டப்பு).

கடந்த வாரங்களில் என் மனதுக்கு சந்தோசமான + மிகவும் துக்ககரமான நிகழ்வுகள் என் வாழ்வில்.

சந்தோசமான நிகழ்வுகள் :  

1.    என் பொண்ணு பள்ளியில் (L K G), கதை சொல்லுவதிலும்( story telling with action), ஃபேன்ஸி ட்ரெஸ் போட்டியிலும் ( character from Ramayana. we have chosen, sita for her) முதலாவதாக வந்தது. 3 வாரப் பரபரப்பான preparation ஒரு வழியாக முடிந்தது. எந்த கேரக்டர் தேர்ந்தெடுப்பது, அதற்கான வசனங்கள், பொறுத்தமான உடைகள் மற்றும் மேக்கப், சார்ட் பேப்பர், மற்றும் பெயிண்ட்+பிரஸ் வாங்கி வந்து தீ மாதிரியான வரைபடம் வரைதல் என்று அதற்காக ஒருவாரம்,  வீட்டம்மா என்னையும் பெண்டு நிமிர்த்தியாகிவிட்டது. இருந்தாலும் குழந்தக்காக கஷ்டப்படுவதில்??? ஒரு சுகம். அதுவும் முடிவில் போட்டியில் முதலாவதாக வந்தால் ரெட்டிப்பு சந்தோசம்.





2. எனது ”சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு” பதிவு செப்டெம்பர் மாத, மல்லிகை மாத இதழில் வெளிவந்துள்ளது, எனக்கு ஒரு பிரதியை அனுப்பி இருந்தார்கள். முதன் முதலில் அச்சடிக்கப்பட்ட ஒரு தமிழ்மாத இதலில் என்னுடையப் பெயர், மனதிற்குள் சின்ன சந்தோசம்.




சோகமான நிகழ்வு :-

  என் வாழ்வின் மிக நெருங்கிய தோழனின் மறைவு.  நினைவு தெரிந்து கிராமத்தில் ஒன்றாகவே சுற்றித்திருந்திரிந்திருக்கிறோம், பத்தாவது வரையிலும் ஒன்றாகவே படித்தோம், மீண்டும் கல்லூரி செல்லும் போது அதே கல்லூரியில் எனக்கு ஜுனியராக சேர்ந்தாலும் ஒன்றாகவே இருந்தோம். கல்லூரி படிப்பு முடிந்து அவன் விவசாயம் பார்க்க கிராமத்திலேயே இருந்துவிட்டான். நான் ஊர் செல்லும் போது கூடிப் பேசுவது என்றாகிவிட்ட காலங்கள். ஊரிலிருந்து போன், ஜெயராமன் இறந்துவிட்டான் என்று, மனதே ஸ்தம்பித்துபோய்விட்டது. என் தந்தையின் இழப்பின் போது மனதினுள் உணர்ந்த ஒரு வெற்றிடத்தை, மீண்டும் உணர்ந்தேன்.

காலையில் போன் மாலையில் எடுத்துவிடுவோம் என்று, உடனே கிளம்பினாலும் ஊர் போய் சேர இரவாகிவிடும், வீட்டிலும், இப்போதுதான், டைபாய்ட் ஜூரம் சரியாகிருக்கு, எப்படி இருந்தாலும் நேரத்திற்கு போய் சேரமுடியாது, 2 நாள் கழித்து செல்லுங்கள் , இல்லையென்றால் காரியத்திற்கு செல்லுங்கள் என்று (போனில் பதிவர் மங்குனியும் இதையே சொன்னான்). முடிவில் அவனது முகத்தை பார்க்கமுடியாமல் போய்விட்டது. பணம் தேடி கிராமத்தை விட்டு செல்பவர்களின் ஈடுகட்ட முடியாத துரங்களில் இதுமாதிரியானதும் ஒன்று.

பட்டணத்தில் இருந்திருந்தால், அவனின் உடல் நலத்தினை ( ஜூரம் ஆரம்பித்து அது நிமோனியா காய்ச்சல் என்று கண்டரியப்பட்டு, மதுரை அப்போலாவில் 10 நாள் சிகிச்சை பலனின்றி இறப்பு) சரி செய்திருக்கலாமோ என்ற எண்ணம். இன்னும் மருத்துவ ஆராய்ச்சிகள் கடக்கவேண்டிய தூரம் அதிகம் போலும். எனது மொத்த வாழ்நாளில் மறக்க முடியாத இழப்புகளில், இவனது மறைவும் ஒன்று.(இதை இங்கு எழுதலாமா வேண்டாம என்று மனதிற்குள் சிறு போராட்டம், முடிவில் உற்றவர்களிடம் பேசி பாரத்தை கொஞ்சம் இறக்கிவப்பதுபோன்ற உணர்வில் எழுதிவிட்டேன்.)


டிஸ்கி 1 : அடுத்த 2 வாரத்திற்கு ஏதும் பதிவு எழுத முடியும் என்று தோன்றவில்லை, முடிந்தால் எழுதுகிறேன். அவ்வப்போது வந்து உங்கள் பதிவுகள் படித்து பின்னூட்டம் இடுகிறேன். ஆனால் கும்மியடிக்க முடியுமா தெரியவில்லை. பொறுத்துக் கொள்ளவும்.

டிஸ்கி 2 : எனது உடல் நலத்தை அக்கறையோடு விசாரித்த பதிவுலக நண்பர்களுக்கு என் நன்றிகள்.




September 05, 2010

என் ஆசான்கள். ஆசிரியர் தினப் பகிர்வு..














முஸ்கி : பதிவுலகம் அறிமுகமான பின் நான் கொண்டாடும் ஆசிரியர் தினம் இன்று. கலாநேசன் அவர்களின் பதிவிற்கு மதிப்பளித்து,  நான் போற்றும் என் குருநாதர்களை பற்றிய பதிவு இது...

பார்த்த சாரதி : என்னோட ஒன்னாப்பு வாத்தியார்..., ஆசிரிய வர்க்கத்துக்கு இன்றும் நான் முன்னோடியாய் நினைக்கும் ஒரு உன்னதமான மனிதர்...., என் கிராமத்தில், 5 வயது குழந்தைகளை... கணக்கெடுத்து... பெற்றோரிடம்.. சண்டை போட்டாவது... பள்ளிக்கு அழைத்துச் சென்று.... அடிப்படைக் கல்வியை... ஊட்டிய பகலவன்...., என் கல்யாணத்தின் போது என் தந்தையின் இழப்பை, சரி செய்ய முயன்ற உன்னதமான மனிதர்...நான் என் மனைவியுடன்...தாலிகட்டிய மறுகணம்..இவர் காலில் விழுந்துதான் ஆசீர்வாதம் வாங்கினேன்..., கண்களில் நீர் பொங்க என்னை வாழ்த்தியவர்...

சீத்தாராம் வாத்தியார் : நாலாப்பு மறுபயும்..படிக்கச் சென்ற போது ஆரத்தழுவி...உற்சாகப் படுத்திய மனிதர்...ஆங்கிலத்தின் ஆரம்பத்தை என்னுள் விதைத்தவர்...., பின்னாளில் நல்லாசிரியர் விருதை அப்துல் கலாமிடம் பெற்ற போது.. என்னிடம் உற்சாகத்துடன் சொல்லி மாய்ந்த மனிதர்...

பேச்சியம்மா டீச்சர் :  ஆறாப்பு படிக்கும்போது..., அறிவுப் பூர்வமாக பாடம் நடத்தவில்லை என்று, என் நினைப்பில் இருந்தாலும்..இவரின் தாயுள்ளம் பெரியது..., எங்களிடம் காட்டும் இவரின் அன்பும் பாசமும்...தாயின் அன்பு பாசத்திற்கு சற்றும் குறைவில்லாதது...

சீனிவாசன் : ஏழாப்பு வாத்தியார்..., சம்பளம் வாங்கும் தொழிலாக கருதாமல்... எங்களுக்கு அறிவூட்டுவதில் பெரும் சிரமப் பட்டவர்..., விபத்தில் ஒரு கால் இழந்து வீட்டோடு இருக்கும் இவரை பார்க்கச் சென்ற போது.. வலி மறந்து..., உற்சாகமுடன் அலவலாவிய உன்னத மனிதர்....

ராஜேந்திரன், ராதாகிருஷ்னன், சுந்தர்: பள்ளிக் கல்வியை விளையட்டாக..அதன் நோக்கம் புரியாமல், விளயாட ஒரு இடம் என்று மனதில் இருந்ததை மாற்றி, கல்வியின் அருமையை..., பாடத்தின் கடுமையை.., எளிமயாக சொல்லிக் கொடுத்து, இவ்வளவுதானா..என்று என்னையும் படிப்பின் பால் அக்கறை கொள்ளச் செய்த மும்மூர்த்திகள். 
  
      ராஜேந்திரன் : ஆங்கிலம்+வரலாறு&புவியியல் அசிரியர், இன்றும் இவர் அளவுக்கு உலக வரலாறை என்னுள் , வேரெவரின் தாக்கமும் பாதித்ததில்லை.
     ராதாகிருஷ்னன் : அறிவியல் வாத்தியார். என் அறிவியல் தாக்கம் இவரிடம் இருந்துதான் தொடங்கியது..., எதையும்..., செயல் முறை விளக்கம் கொடுத்து..நாங்கள் புரிந்து கொண்டோமா என்பதில் அதிக அக்கறை செலுத்தியவர்...
    சுந்தர் : கணக்குப் பாடத்தை..சூ...இவ்வளவுதானா என்று எண்ண வைத்தவர்..., கணக்கில் நூத்துக்கு நூறு எடுப்பது எருமைமாடு மேய்ப்பதை விட சுலபமானது என்ற எண்ணத்தை தோற்றுவித்த மகான்.

அரங்கசாமி : பத்தாவது தமிழ் வாத்தியார். தமிழை முறையாகக் கற்றுக் கொடுத்தவர் (நான் சரியாகக் கற்றுக் கொண்டேனா என்பது வேறு விசயம்...). பள்ளி வயதில் இவரைக் கிண்டலடித்ததை பின்னாளில்.. இவரிடம் மன்னிப்புக் கேட்டதுண்டு. அதை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் என்னை அரவனைத்த அவரின் பாசம் மறக்க முடியாதது...

பூங்கோதை : +1&+2  வேதியல் பாடத்தை ரொம்ப சிரமேற்கொண்டு எனக்கு புரிய வைக்க முயன்றவர்...,  வகுப்பில் மொத்த மதிபெண்ணில் முதல் மாணவனாக வந்தாலும்..அவர் பாடத்தில் என் மதிப்பெண் குறைவு என்ற ஆதங்கம் இவருக்கு உண்டு...,  போன வருடம் பள்ளியில் சென்று சந்தித்த போது... அவர் கொண்டு வந்த மதிய உணவை, என்னை வற்புறுத்திச் சாப்பிடவைத்து மகிழ்ந்த மற்றொரு தாய்க்குச் சமமானவர்.

ஆமருவியப்பன் :  +1&+2 கணக்கு வாத்தியார், கணக்குப் பாடத்தில் நான் அதிக மார்க் வாங்குவதால், என்னிடம் தனிப் பிரியம் வைத்தவர்..., எளிமையாகப் பாடத்தை புரிய வைப்பதில் வல்லவர். கல்லூரிப் படிப்பு முடிந்து, இப்போது சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன் என்று, வீடு தேடிப் போய் சொன்ன போது அளவிலா ஆனந்தம் அடைந்தவர்...

தனபால் : +1&+2 இயற்பியல் வாத்தியார், இந்தப் பாடத்தை என் விருப்பப் பாடமாக கல்லூரியில் தேர்ந்தெடுக்க காரணமானவர்..., பட்டிக்காட்டிலிருந்து சென்னை வந்து படிக்க வந்ததால் என்னிடம் தனி பிரியம் உண்டு..., ஆசிரியத்தொழிலை நிரம்ப நேசிப்பவர்.

போத்திராஜ் : இயற்பியல் துறைத் தலைவர். என் கல்லூரி வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர். கல்லூரிப் பாடத் திட்டங்கலை தாண்டி நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய பல விசயங்களை, அக்கறையுடன் சொல்ல முயன்றவர். என் கல்லூரி வாழ்க்கையில் ஒட்டு மொத்த ஆசிரியர்களில் மாணவர்களின் மேல் அதிக அக்கறை கொண்ட மாமனிதர் இவர்.

சுவாமிநாத ஐயர் : நான் ஐஐடி- மேல் படிப்புக்கான நுழைவுத்தேர்வில் தோற்றவுடன், என்னுடைய அடுத்த இலக்கான சிஏ படிப்பிற்காக, இவரிடம் தான் பயிற்சிக்காக சேர்ந்தேன். என்னுடைய நண்பனாய், குருவாய், எனக்கு உலகத்தை பற்றிக் கற்றுக் கொடுத்தவர். இவரிடம் தான், நான் ஆங்கிலத்தை அதிகமாகக் கற்றேன். கம்பனி..ஆடிட்டிங்..தொழில்..வர்த்தகம்...பங்கு மார்கெட் என்ற அத்தனை நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தவர்... பார்ப்பனர்பால் என்னுள் இருந்த கோபதாபங்களை, தவிடு பொடியாக்கியவர், சாதி மத பேதம் எனக்கில்லை என்று என்னையும் மதித்து நிரூபிக்க முயன்றவர்...

நான் இங்கே குறிப்பிடாத பல ஆசிரியர்கள் உண்டு , என்னுள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுல், மேலே சொன்ன இவர்கள் முக்கியமானவர்கள்.

விவசாயத்திற்கு அடுத்ததாக, மற்ற எல்லா தொழிலைக் காட்டிலும் ஆசிரியர்த் தொழில் உன்னதமானது என்பது என் தாழ்மையானக் கருத்து.

இன்று, சிலபல இடங்களில் இது பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிப் போன அவலம் நடந்து கொடிருந்தாலும்...,  ஆசிரியத் தொழிலை உன்னதமானதாக பாவிக்கும் மனித மகான்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்... அவர்களை... ஆசிரியர் தினமான... இன்று கொண்டாடுவோம்..




September 04, 2010

105 நாட் அவுட்...

முஸ்கி : என்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 100ஐக் கடந்ததால், நூறுக்கென்று ஒரு சிறப்பு நடைமுறையில் இருப்பதால், அவர்களுக்கு நன்றி தெரிவிக்க இந்த பதிவு.....

இந்த பதிவுலகம் அறிமுகமாகி நான்கு மாதங்கள் கடந்து விட்டது. முதல் பதிவு எழுதி இன்றோடு 75 (இதுக்கு என்ன விழாப்பா!!!, வெள்ளியா?, தங்கமா?, பவளமா?...) நாட்கள் ஆகப்போகிறது....

அறிமுகமான ஆரம்ப காலத்தை விட இன்று பதிவுலகம் பற்றிய புரிதல்கள் சற்று கூடியிருக்கிறது.

நண்பர்கள் வட்டம் பெருகி இருக்கிறது. சில நண்பர்கள் பதிவுலகம் தாண்டி நெருக்கமாகி இருக்கிறார்கள். தொலைபேசியிலும், நேரிலும் நட்பு தொடர்கிறது.

அடுத்தவர்கள் எழுத்தை ரசித்து, சிரித்து, சிந்தித்து, வியப்படைந்து, பிரமிக்கும் தருணங்கள் என் வாழ்வில் இன்றும் தொடரும் நேரத்தில்,  என் எழுத்தும்!!!, எழுத்து நடையும்!!! பிடித்துப்போய்!!! என் ப்லாக்கை பின்தொடரும் நண்பர்களின் எண்ணிக்கை 100 தாண்டி விட்டது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

நம் மனதின் விருப்பத்திற்கு சில பதிவுகள் எழுதினாலும், மற்றவர்களிடம் பாராட்டுபெருவதற்காக எழுதவில்ல என்று சில சமயம் வெளியில் சொல்லிக் கொண்டாலும், நாம் எழுதுவதை பலர் படிக்கிறார்கள் என்று அறியும்போது , பாராட்டி/திட்டி/கும்மி அடித்து பின்னூட்டம் இடும் போது, நம் வலை பக்கத்தை  பதிவர்கள்/வாசக சகோதரர்கள் தொடரும் போது... மனதிற்குள் ஒரு உற்சாகமும், மகிழ்ச்சியும் கரைபுரண்டு ஓடுவதை மறுக்க முடியாது.

தமிழில் எழுதும் வழக்கம் மற்றும் தேவை பதினைந்து வருடங்களுக்கு மேலாக இல்லாமல் இருந்ததால், எழுத்துப் பிழைகளும்...,   ர,ற, ந,ன,ண, ல,ல,ள போன்ற எழுத்துக்களை சரியான இடத்தில் கையாலுதலில் தவறும் நேரிடுகிறது...., அதற்கு தமிழ்த் தாயிடமும், என் எழுத்தை படிக்கும் வாசக நண்பர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

பின் தொடர்பவர்களுக்கு நன்றி சொல்லும் , இந்த பதிவை முடிந்தவரை உரைநடைத் தமிழில் எழுதுகிறேன்.


டிஸ்கி 1 : நண்பர்கள் வழக்கம் போல் (சொன்னா அப்படியே கேட்ருவாய்ங்க @$#%&*$%##.....) பின்னூட்டத்தில் பாராட்டி , திட்டி, கும்மியடிக்கலாம் என்று அனுமதி???!!! அளிக்கிறேன்!!!.


பின்தொடர்பவர்கள்







September 01, 2010

கிராமத்துக் கல்யாணம் + மொய்



முஸ்கி : பதிவு சின்னது மக்களே சந்தோசமாப் படிங்க..., தலைப்புதான் என்ன வைக்கிரதுன்னு கொஞ்சம் குழம்பி இப்படி வச்சிருக்கேன்.

     ஆடி முடிஞ்சி கல்யாண கலைகட்டிருச்சி, ஊர்லேர்ந்து தினத்துக்கும் உறவுக்காரங்க, கூட்டாளிக வீட்டு கல்யாண பத்திரிக வந்துட்டிருக்கு. ஆஃபீஸ், வேலை, குழந்தைக ஸ்கூல்னு, அவசியம் போயாகனும்னு தோனுற கல்யாணத்துக்கு கூட போக முடியாம போகுது. சிலவங்க புரிஞ்சிகிட்டு, சரி நீயென்ன பண்னுவே, அடுத்த விசேசத்துக்கு வந்து சேந்துருன்றாங்க, சிலவங்க கோச்சிக்கிராங்க..., ம்ம்ஹூம்...பட்டணத்து பணம்தேடுர வாழ்க்க ஊர்ல இருக்கிற உறவுக, ஃபிரண்ட்சுக கிட்டேர்ந்து ரொம்பதான் அன்னியமாக்கிட்டிருக்கு..., 

     வருசத்துக்கு ஒருக்கா மாசி மாசத்துல நடக்குற ஊர்ப்பொங்களும் (பொழப்ப பாக்க நாலாபுரமும் போன ஊர் உறவுக பெரும்பாலும் வந்துருவாங்க),   ஒட்டு மொத்த பங்காளிகளும் ஒன்னா கூடுற குலதெய்வம் வழிபாடும்(மகா சிவராத்திரி அன்னிக்கி), இல்லைனா, வாழ்க்கைல எல்லா சனத்தையும் ஒன்னா பாக்குற பாக்கியம் இல்லாமையே போயிருக்குமோன்ற சந்தேகம் கூட வருது..., அன்னிக்கி நாம் கூடி குலாவி பட்டுக்கிற சந்தோசம் அடுத்த வருசம் வரைக்குமான டானிக் மாதிரி, அனுபவிச்சவங்களுக்கு புரியும்.

     சரி தலைப்புக்கு வருவோம், சில வருசத்துக்கு முன்னாடி ஒரு ஆவணி மாசம் ஒரு கல்யாணத்துக்கு ஊருக்கு போயிருந்தே (விட்டுபோன கல்யாண வீடுக, இனி அடுத்து வரமுடியாத கல்யாண வீடுகன்னு அப்படியே தலைய காமிச்சி சொல்லிட்டு வரதுக்கும் சேத்துதான்). 

     அப்படியே என் அக்காவ கட்டிக்குடுத்த ஊருக்கு (பிரியமுடன் வசந்த்துன்னு ஒரு பிரபல பதிவர் இருக்காரே அவர் ஊர்...) ஒரு எட்டு போய் தலைய காமிச்சிட்டு திரும்பலாம்னு போயிருந்தேன். நைட் தூங்கி எழுந்தா வீடே பரபரப்பா இருந்துச்சி... அந்தூர்ல நாலு கல்யாணமாம், உள்ளூர்ல மூனு , பக்கத்து பெரியகுளத்துல ஒன்னு. உள்ளூர் கல்யாணத்த சமாளிச்சுடலாம், பெரியகுளத்துல நடக்குற கல்யாணத்துக்கு எப்படி போரதுன்னு, அக்காவும் மாமாவும் தீவிரமா டிஸ்கஸ் பண்ணிட்டிருந்தாங்க..., என்னை பாத்தவுடனே... டேய் தம்பீனு லைட்டா ஒரு இலுவை... 

     எனக்கு புரிஞ்சிருச்சி.., ம்ஹூம் என்னால முடியாது அவங்கள தெரியாதுனு எஸ் ஆகப்பாத்தேன்..., “உன்னை அவங்களுக்கு நல்லா தெரியும்டா, நீ டீவில பேசும்போது அவங்க பாத்தாங்க, நம்ம வீட்ல எல்லாரையும் அவங்களுக்குத் தெரியும்,  அதுவும் இல்லாம... இந்தூர்ல இருக்குற உன்னோட ஃபிரண்ட்சும் வருவாங்க..., போகலைனா வருத்தப்படுவாங்கடானு சொல்லி கிளப்பிருச்சி. 

     சரி வேற வழியில்ல, போகலைனா காலத்துக்கும் இத சொல்லிக் காமிக்கும்னு நானும் கிளம்பிட்டேன். கொஞ்சம் இருடானு சொல்லிட்டு, அக்காவும் மாமாவும் வீட்ல எதயோ மும்முரமா தேட ஆரம்பிச்சாக, கடைசில பரண்மேல இருக்கிற ஒரு நோட்டு, எதுக்குன்னு கேட்டா, அவங்க எவ்வளவு மொய் இவங்களுக்கு மொய் எழுதிருக்காங்கனு செக் பண்றாங்களாம்.

     விடுக்கா நன் பாத்துகுறேனு சொன்னா கேக்கலை, அப்புறம் ஏதோ கணக்கு போட்டு மாமா பேர்ல ரூ 50 மொய் எழுதிட்டு வந்துருன்னிச்சி, அது என்ன கணக்குனு கேட்டா, அதுக்கு மூனு வருசத்துக்கு முன்னாடி ரூ 25 மொய் எழுதினாங்களாம், இன்னிக்கு குறைஞ்ச மொய் ரூ50 ஆயிருச்சாம், அதனால் இந்த அமோண்டு. அதென்னக்கா, அப்படின்னா என்னை கல்யாணத்துக்கு போகச் சொல்லலையா, மொய் எழுதுரதுக்குதான் அனுப்புரியான்னு கேட்டா, உனக்கு அதெல்லாம் புரியாது சொல்றதமட்டும் செய், “உன் கல்யாணத்துக்கு மொய் வாங்கக் கூடாதுனு சொன்னே, என்னாச்சி , வந்த பாதிபேர், கல்யாணச் சாப்பாடு சாப்பிடாம திட்டிட்டு போனது தெரியும்ல”, பட்டணத்துக்கு போய் இங்க இருக்கிற நெறய நடைமுற உனக்குத் தெரியல, போடா சொல்ரத மட்டும் செய்னு சின்ன அதட்டல்.

     அங்க மண்டபத்துல ஒரு நாலு பேர் தெரிஞ்சவங்க இருந்தாங்க, சந்தோசமாகி அவங்ககூடயே இருக்கலாம்னு பாத்தா, பன்னாடைக, இரு மாப்ல, இரு பங்காளினு அங்க வந்த அவங்க உறவுக்காரக கிட்டே பேசப் போய்ட்டாங்க.... எனக்கு வேற யாரையும் தெரியாம யாரப் பாத்தலும் சின்னதா சிரிச்சிட்டு எப்படா கல்யாணம் முடியும் , போய் சாப்டிட்டு (மொய் எழுதப் போகும் போது கைல சாப்ட்ட வாசனை இல்லைனா மொய் வாங்குறதுக்கு முன்னாடி, சாப்டியானு 1008 எட்டு கேள்வி கேப்பாய்ங்க) மொய் எழுதிட்டா வீடு போய் சேரலாம்னு ஆயிருச்சி. அங்கிருந்த சிலபேர் , என் அக்கா பேர சொல்லி அவுக தம்பியானு குசலம் விசாரிச்சாக.... எனக்குதான் அவுக யாரன்னு தெரியல.

     ஒருவழியா மாம்ள கைல தாலிய எடுத்தவுடனே, அத பொண்ணு கழுத்துல கட்டுரதுக்கு முன்னாடி, வந்த பாதிகூட்டம் சாப்டுர எடத்துகு ஓடிச்சி..., நானும் ஜோதியில கலந்து சாப்டிட்டு, மொய் எழுதுர இடத்துக்கு போனா, அங்க ரெண்டு பேரு தனித் தனியா மொய் எழுதிட்டிருந்தாங்க. இப்பதான் எனக்கு என்னதா ஒரு டவுட்டு நாம வந்தது மாப்ள வீட்டு சார்பாவா, பொண்ணு வீட்டு சார்பாவானு, அக்காகிட்ட கேக்க மறந்துட்டேன்.

     சரின்னு ரெண்டு இடத்துலயும் ரூ 100 எழுதிட்டு, வெத்தலய வாங்கி அங்கிருந்த ஒரு பாட்டிகிட்ட சுண்ணாம்பு தடவித் தரச் சொல்லி போட்டுகிட்டு (எனக்கு சுண்ணாம்பு அளவு தெரியாது, ஒரு வாட்டி அதிகமா தடவி நாக்கு புண்ணப் போச்சி, அளவு கம்மியானா நாக்கு செவக்காது... வெத்தலை போட்ட திருப்தி இருக்காது...) வீடு வந்தேன்.

     என்னடா கல்யாணம் நல்லா நடந்ததா , மறக்காம மொய் எழுதிட்டியானு அக்கா கேட்டுச்சி. அப்பதான் நைசா ஆமா, நீ அனுப்புனது மாப்ல வீட்டு சர்பாவா பொண்ணுவீட்டு சார்பாவானு கேட்டேன், டேய் நான் பொண்ணு வீட்டுக்கு எழுதச் சொன்னேண்டா நீ யாருக்கு எழுதுனே (அப்பாடா, உளரிடுச்சி...). நல்ல வேலைக்கா பொண்ணு வீட்டுக்குதான் ரூ 50 எழுதுனேன்னு பொய் சொன்னேன்.

உண்மைய சொல்லிருந்தா, முட்டாப்பயனு ஒரு பட்டம், பணத்தோட அருமை தெரியலைடான்னு ஒரு வசவு விழுந்திருக்கும்... 

உறவுப் பாசமும் இருக்கு, பணத்துல கணக்கும் இருக்கு... எப்படியோ இந்த கிராமத்து  அன்யோன்யம் பட்டணத்து தாக்கம் அதிகமாகி... அழியாம இருந்தாச் சரித்தேன்.

பட்டணத்துல நாம பிரசண்டேசன் என்ற பேர்ல ஆயிரம் , ஐயாயிரம்னு கல்யாணத்துக்கு செலவு செய்றோம். எனக்கென்னமோ இங்க பாசத்தை விட பகட்டு கொஞ்சம் கூட இருக்குறா மாதிரி ஒரு ஃபீலிங்கு.


டிஸ்கி : பதிவு சின்னதா போட்டதுக்கு, பின்னூட்டமும் போடுங்க, இல்லினா அடுத்த பதிவு அஞ்சு பக்கத்து எழுதுவேன்.



August 30, 2010

இளைஞர்கள் நாட்டில்!... என்ன கொடுமை சார் இது..



முஸ்கி : போன பதிவு மொக்கை போட்டதுல  (அதயும் ரொம்ப பேரு படிச்சிருக்காங்க...) பலபேர் பின்னூடத்துல கும்மிடானுக... பட்டாபட்டி போன் பண்ணி வார்னிங் பண்ணிட்டாப்ல (நல்லா உசிப்பேத்திவிடு மக்கா..) . அதனால கொஞ்சம் சீரியசா ஒரு பதிவு (அப்படின்னு நானாவது... சொல்லிக்கிறேன்)

















செய்தி : உலகப் பெரும் பொருளாதார, முதல் 15 நாடுகளில் ( உலகின் மொத்த உற்பத்தியில் இந்த நாடுகளின் பங்கு 70%, உலக மக்கள் தொகையில் 60%) இந்தியாவில் தான் இளைஞர்கள் அதிகம் . இளஞர்களின் எண்ணிக்கை 50% க்கும் மேலாகவும், முதியவர்களின் எண்ணிக்கை 50%க்கும் கீழ் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன ( நன்றி சண்டே டைம்ஸ்,  இலங்கை அரசுக்கு ஜால்ராவாக மாறிய பின் ஹிண்டு படிப்பதில்லை.).

ஆனால் இந்தியாவின் கேபினெட் மந்திரிகளின் சராசரி வயது 64 ஆகவும், பிரதமர்களின் சராசரி வயது 66 ஆகவும் உள்ளது.

கவருமெண்டு மற்ற எல்லா வேலைக்கும்,  ஓய்வுக்குனு ஒரு வயச சொல்லி அதுக்கப்புறம் வீட்டுக்கு அனுப்புறாங்க, ஏன், அதுகப்புறம் அவங்க உடலாலும் , உள்ளத்தாலும் சோர்வடைஞ்சிருப்பாங்க, முன்னை போல முழு வேகமாகவோ, அதிக ஆற்றலுடனோ செயல்படமுடியாதுன்னுதானெ இந்த முடிவு.

இங்க அரசியல்வாதிக்கு மட்டும் எப்படி வயசு ஏற ஏற சுறுறுப்பும், வேகமும் கூடுது, ஒன்னும் விளங்களை சாமிகளா...(ஒருவேலை இப்பதான் அனுபவத்தை பயன்படுத்தி நல்லா சுறுசுறுப்பா சுருட்டுராங்களா) உங்க யாருக்கும் தெரிஞ்சா சொல்லுங்க.... புண்ணியமா போகும்...

இப்படி கிழடுகளா கேபினெட்ல இருக்குறதுனாலதா..., ஒரு முடிவையும் உறுதியா எடுக்காம,  மொன்னையா இருக்குறதுனால...., பக்கத்துல இருக்குற குஞ்சு குளுவான் நாடுக கூட நம்ம ஏளனம் செஞ்சிகிட்டு பயமில்லாம இருக்குதா?...

வயசனவங்க விவேகமா இருப்பாகண்னு ஒரு சைடுல சொல்லிக்கிறாங்க..., ஒரு வேளை 78 வயசுலையும் நம்ம சிங்கு தாத்தா... இத்தாலி அம்மாக்கு, நேக்கா ஜால்ரா அடிச்சிகிட்டு ..டம்மி பீசா, தலையாட்டுர விவேகத்தை சொல்றாகளா..., இதுக்கு அந்தம்மவையே பிஎம் ஆக்கிருந்தா ஒரு வேளை எடுக்குற குப்பை முடிவையாவது சீக்கிரம் எடுத்திருக்கலாம், தேவை இல்லாம,  இப்ப பாருங்க, உங்க பேர் என்னானு கேட்டா கூட, இருங்கன்னு சொல்லி காக்க வச்சிட்டு, அந்தம்மா கிட்ட போய் பெர்மிசன் வாங்கிட்டு வந்து பதில் சொல்றாரு... என்னமோ போங்க...

இந்த செய்திய பாத்தவுடனே, உண்மையானு இது சம்பந்தமா தேடிப் பாத்தா 40 வயசுல ஒருத்தர் பிரதமர் ஆயிருக்காரு.. ராஜீவ் காந்தி,  அதுவும் அவங்கம்மா இறந்ததுனால, இந்தியாவுல அந்த போஸ்டுக்கு வேற யாருக்கும் தகுதி!!! இல்லாததினால பிளைட் ஓட்டிட்டு இருந்தவரை கூட்டிட்டு வந்து பிரதமர் ஆக்கி இருக்காங்க...., பாவம் ராகுல் காந்தி அவருக்கு போன ஜூன்ல 40 முடிஞ்சிருச்சி , அடுத்த தேர்தல் (2014) வரும்போது ஒருவேலை பிரதமர் ஆனாகூட 45  ஆயிருக்கும். 

இனி 40 வயசு,  இல்லைனா,  அதைவிட கம்மியான வயசுல, ஒருத்தர் பிரதமராவோ, கேபினெட் மிஸ்ட்ராவோ வரனும்னா... ரகுல்காந்தியோட பையனோ பொண்ணோ... எதிர் கலத்துல வந்தாதான் உண்டு... இல்லைனா வேற யரும் வரமுடியாது...., அவங்க குடும்பத்தை தவிர, நாட்ல இருக்கிற ஒரு பயபுள்ளைக்கும் தகுதியே கிடையாது....

வயசு ஏற ஏற விவேகமும், பொறுப்பும் ,  பண்பும் அதிகமாகும்னு நினைக்கிறது எனக்கென்னமோ முட்டாள்தனமா படுது.... ஏன்னா இப்ப இருக்கிற அரசியல்வாதிகள எடுத்துகிட்டா, 55 வயசு தாண்டுனவங்கள்ல,  பலநாதாரிகளோட செயல் ரொம்ப மோசமா இருக்கு,  இவங்க ஒருத்தர் பதவில இருக்குறது,  அவங்க வீட்டுல இருக்குற 10க்கும் மேற்பட்ட குடும்பத்து ஆட்களும் பதவில இருக்குறாமாதிரிதா அராஜகம் செய்ஞ்சிகிட்டு இருக்காக...

அதனால அடுத்து வர்ர தேர்தல்ல , ஒட்டுக்கு பணம் வாங்காம !!!, ஓசிக்கி நாய் மதிரி நாக்க தொங்க போட்டுகிட்டு அலையாம..., ஜாதி மதம் பாத்து நாசமத்து போகாம..., உங்க தொகுதில நிக்கிற நல்லவங்கள்ல!!!,  யாருக்கு 50 வயசுக்கு கம்மியோ அவங்களுக்கு ஓட்டு போடுங்க(அப்படி யாரும் 50 வயசுக்கு கீழே இல்லைனா... அப்புறம் உங்க இஷ்டம்...), ஒருவாட்டி ட்ரை பண்ணிதான் பாப்போமே..., என்ன ஓட்டுக்கு 2500 + பிரியாணி +குவார்ட்டர், நஷ்டம் அவ்வளவுதானே..., அஞ்சி வருசத்துக்கு கணக்கு பாத்தா இது ஒன்னும் பெருசில்ல நாதாரி மக்களே... ரோசனை பண்ணுங்க...  முன்ன பின்ன இருந்தாலும் கணக்கு சரியாத்தா வரும்...

கீழே உங்களுக்காக நம்ம நாட்டோட பிரதம மந்திரிக பேர், வயசு குடுத்திருக்கேன் பாருங்க, என்னா இளமை..., 

1. ஜவஹர்லால் நேரு - 1947-ல சுதந்திரம் வந்தாலும் 52-ல நடந்த பொதுத் தேர்தல்தான் ஆரம்பக் கணக்கு அப்ப இவருக்கு வயசு 63,  இறக்குரவரைலும் இவர்தான் பிஎம் அப்ப வயசு 75

2. குஜரிலால் நந்தா - நேரு மாமா இறந்துதுனால இடக்கால பிஎம் , அப்ப இவருக்கு வயசு - 66 - இவரு எத்தனையாவது பிஎம் அப்படின்ற கேள்விகுள்ள வரமாட்டாரு...

3. லால்பகதூர் சாஸ்திரி -  பிஎம் ஆனப்ப வயசு 62.  இவரு பரவாயில்ல பாகிஸ்தான பின்னி பெடலெடுத்து தாஷ்கண்ட் ஒப்பந்தத்துல கிட்ட தட்ட மிரட்டி அயுப்கான கையெழுத்து போட வச்சிருக்காரு.  சீனாகிட்ட வாங்கின , மரண அடிக்கி கொஞ்ச ஆறுதல் மருந்து.

4. இந்திராகாந்தி - நம்ம காமராசர் அய்யா பிடிவாதம் பிடிச்சி, மொரார்ஜி தேசாய்க்கு பல்பு குடுத்துட்டு, இவங்கள பிஎம் ஆக்கிருக்காரு, தலயே ஆயிருக்கலாம்... மிஸ் பண்ணிருக்காரு..., பாவம் பொழைக்கத் தெரியாதவரு...., அப்ப இந்திராவுக்கு வயசு - 49. முதல் தடவை சுதந்திர இந்தியாவுல 50 வயசுக்கு கீழ ப்ரு பிஎம் அதுவும், அம்மனி.

5. மொரார்ஜி தேசாய் - இந்தராகாந்தி ஆனவமா பண்னுன அட்டூழித்தோட புண்ணியத்துல , சுதந்திர இந்தியாவுல முதல் காங்கிரஸ் அல்லாத பிஎம். இவருதான் இந்தியாவுல அதிக வயசுல பிஎம் ஆனவரு ... அப்ப வயசு - 81 (என்ன கொடுமை சார்.... பாவம் வீட்ல உக்காந்து ரெஸ்ட் எடுக்காம...)

6. சரன்சிங் - மொரார்ஜிக்கு பல்பு குடுத்துட்டு இவர் பிஎம் ஆயிருக்காரு. பாவம் 6 மாசம் சொச்சம் பிஎம்-ஆ இருந்திருக்காரு, வயசு -77

இடையில மறுக்கா இந்திராகாந்தி... , மத்தவங்களுக்கு அல்வா....

7. ராஜீவ் காந்தி - அம்மாவ , ஒரு சிங் படுபாவி போட்டுத் தள்ளினதால , அக்கடானு பிளைட் ஓட்டிட்டிருந்த அம்பிய கூட்டியாந்து பிஎம் ஆக்கிட்டாங்க...., இவர்தான் இன்னிவரைக்கும்... இந்தியாவோட இளைய பிஎம், 40 வயசுல பிஎம் னா என்னானே தெரியாத !! போஸ்ட். அதனாலதானோ என்னவோ , இலங்கை ஜெயவர்த்தனே மிட்டாய் குடுத்தே இவர ஏமாத்தி ஒப்பந்தத்துல கையெழுத்து வாங்கிட்டாரு... கொல்லப்பேரு அந்த ஒப்பந்தம் சூப்பர்னு வேர சொல்லிக்கிறாங்க...

8. வி.பி.சிங் - போபர்ஸ் ஊலழ் புண்ணியத்துல 58 வயசுல, மாநில அல்லக்கை கட்சிகள நம்பி பிஎம் ஆனவரு, பாவம் ஒரே வருசத்துல கவுத்துடாங்க.

9.சந்திரசேகர் - வி.பி. சிங்க கவுத்துட்டு தமிழ்நாட்ல DMK கவர்மெண்ட கவுக்குரதுகாக பிஎம் ஆக்கி அது முடிஞ்ச வுடனே வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. இவரு 63 வயசுல பிஎம் ஆயிருக்காரு.

10. பி.வி.நரசிம்மராவ் -  இவரு பிஎம் ஆனது ஒரு அரசியல் விபத்து - 70 வயசுல பிஎம் ஆயிருக்காரு. வாயே திறக்காம. உம்முனு 5 வரசத்த ஓட்டி கின்னஸ் சாதனைக்கி முயற்சி செஞ்சவரு.....

இவரு பிஎம் ஆகுறதுக்கு காரணம், 10வது லோக்சபாவுக்கு, 3 கட்டமா அறிவிச்ச தேர்தல்ல , முதல் கட்ட வாக்கு பதிவு முடிஞ்ச மறுநாள், தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த ரஜீவ் காந்திய , ஸ்ரீபெரும்புதூர்ல குண்டு வச்சி கொன்னுட்டாங்க எல்டிடிஈ,  சின்னப் புள்ளத்தனமா, தெனாவட்டுல செஞ்ச மகாத்தப்பு,  எல்டிடியோட தலயெழுத்து மறிப் போனதுக்கு இது முக்கியமான ஒரு காரணம். பின்னாடி இத ஒரு துன்பியல் சம்பவம்னு சப்பைகட்டு கட்டியும் பிரயோசனம் இல்லாம போச்சி, கொடுமை என்னானா, இவங்கள ஒழிக்கிரோம்னு ஈழத்து மக்களையும் சேத்து கொன்னதுக்கு நாம உடந்தையா ஆயிட்டோம்... கலைஞர் புண்ணியம்..., பதவிய துச்சமா நினைச்சிருந்தா ஈழத்து மக்களுக்கு பெரிய கொடுமை நடந்திருக்காது..., ஆனாலும் இவர்தான் உலகத்தமிழர்களுக்கு தலைவர்னு சொல்லிக்கிறாங்க, ஆனா, தனிப்பட்ட முறைல எனக்கு இவர்தான் உலகத்தமிழர்களோட முதல் துரோகி. ம்ம் என்னத்த சொல்லி என்னத்த....

11. அடல் பிஹாரி வாஜ்பாயி - முதல் தடவை 13 நாள், 2வது தடவை 13 மாசம் , அப்புறம் மறுக்கா வந்து 5 வருசம் பிஎம் வேலை பாத்தாரு.  முதல் தடவை பிஎம் ஆகும்போது இவருக்கு வயசு 76.

12. எச் டி தேவகவுடா - கொழப்பத்துல பிஎம் ஆனாரு...., பிஎம் மா இருந்த 11 மாசமும் தூக்கத்துலேயே கழிச்ச நல்ல மனுசன்..., பார்லிமென்ல கூட தூங்குன ஒரே பிஎம்னா பாத்துக்குங்க..., இவரு 63 வயசுல ஆயிருக்காரு..

13.இந்தர் குமார் குஜ்ரால் - தேவகவுடாவ வீட்லேயே போய் தூங்க சொல்லிட்டு, வெளியுரவுத்துறைய நல்லாப் பத்துகிட்டு இருந்த மனுசனை பிஎம் ஆக்கினாங்க...அப்ப இவருக்கு வயசு 78.

இவரு இலங்கை அதிபர் சந்திரிகாவோட பட்டக்ஸ பிடிச்சி கிட்டே நடக்குறப்ப எடுத்த போட்டோ பிரசித்தம். நல்ல மனுசன் 12 மாசம் முடிஞ்சி ஒரு வருசம்னு சொல்லுரதுக்குள்ளே கவுத்துட்டாங்க...., யாரா??? எல்லா பிஎம்மும் காங்ரஸ் கவுத்ததுதான்... வேற யாருக்கு அந்த கெபாஸிட்டி இருக்கு...

14. மன்மோகன் சிங் - ஒலகத்துலேயே 36 பக்கத்துக்கு பயோடேட்டா வச்சிருக்கிற பெரிய படிப்பு + வேலை பாத்த, ஒரே பிரதமர்..., பேரு பெத்த பேரு தாக நீலு லேதுன்றா மாதிரி..., உலக நம்பர் 1 டம்மி பீசு இவர்தான். வீட்ல கக்கா போறதுக்கு கூட இத்தாலி அம்மாகிட்ட பெர்மிஸன் வாங்கிட்டுதான் போவாரு, அவ்வளவு நல்ல பவ்யமான மனுசன்...  இப்ப 




வயசு 


78



பொருளாதாரம் படிச்சி நல்லா நிர்வாகம், பன்னவராம், ரிசர்பேங்குக்கே கவர்னரா இருந்தவராம்..., நம்ம பா.சி. ய கூட சேத்துக்கிட்டு ... இந்தியாவோட வெவசாயத்தை கங்கனம் கட்டிகிட்டு ஒழிக்கிறதுல கிட்டதட்ட 90-லேர்ந்து அயராது பாடுபட்ட மனுசன்..., கேட்டா ஏதோ இண்ட்ஸ்ட்ரின்னுவாரு, மொத்த ஜிடிபி குரோத்துன்னுவாரு, அம்பானியோட மாச வருமானத்தையும், நம்மூர்ல சோத்துக்கு வழியில்லாம இருக்கிர புண்ணியவனோட மாச வருமானத்தயும் கூட்டி ரெண்டா வகுத்து , இந்தியாவோட தனி மனித வருமானம் வலுவா இருக்குன்னு மார்தட்டிட்டு போயிருவாரு....

15. ராகுல் காந்தி ......???? -பிஎம் பதவி... இவங்க குடும்பம் மொத்த குத்தைக்கி எடுத்திருக்கிரதனால இவருக்கு ? மார்க் ...


 எனக்கென்னமோ மத்த காங்கரஸ்காரங்கள விட இவரு பிரதமரா ஆனா பரவாயில்லைனு தோனுது. அரசியல் தனம் கம்மியா இருக்குது... ஆக்டிவா இருக்குறா மாதிரியும் இருக்கு, மறுபடியும் காங்ரஸ் ஆட்சிக்கி வரக் கூடாது... அப்படியே வந்தாலும் இவரு பிஎம் ஆனா ஒகேன்னு தோனுது..., ஏன்னா வேற யாராவது பிஎம் ஆனா... எப்படியும் இவங்களுக்கு டம்மி பீசாத்தான் இருக்கப் போறாங்க...., அதுக்கு இவரு எவ்வளவோ மேல்...

ஃபுலோ நல்லா வரும்போது எழுதுனா பதிவு நீளமாகி அதுக்கும் வாங்கி கட்டிக்கணும்...., அதனால இத்தோட முடிச்சிகிட்டு ஜஹா வாங்கிக்கிறேன்...

டிஸ்கி : ராகுல் காந்திக்கி 25 வயசுல கல்யாணம் பண்ணி வச்சிருந்தா இன்னேரத்துக்கு அவர் வாரிசுக்கு 15 வயசாகும்....., சீக்கிரமே இந்தியாவுக்கு இளைய பிரதமர் கிடச்சிருப்பார்....., யார் கண்ணு பட்டதோ லேட்டாயிகிட்டே போகுது..., யாராவது எடுத்து சொல்லக்கூடாதாப்பா...என்ன நீங்க...




August 29, 2010

சுலபம் Vs கடினம் ( மரண மொக்கை..)

முஸ்கி : படிங்க.... படிங்க....

1.

சுலபம் : அடுத்தவர் குறைகளை கண்டறிவது/சுட்டிக்காட்டுவது

கடினம் : தம் குறைகளை கண்டறிவது / ஒப்புக்கொள்வது

=====================================================================
2.

சுலபம் :  வார்த்தகளை சிதற விடுவது / யோசிக்காமல் பேசிவிடுவது

கடினம் : நாவடக்கம் 

====================================================================
3.

சுலபம் : தன்மீது நேசம் கொண்டவரை புண்படுத்திவிடுவது/ காயப்படுத்துவது


கடினம் : அந்த காயத்தை ஆற்றுவது 

====================================================================
4.

சுலபம் : தவறுக்கு மன்னிப்பு கேட்பது

கடினம் : மன்னிப்பை ஏற்றுக் கொள்வது

====================================================================
5.

சுலபம் : சட்ட திட்டங்களை வகுப்பது

கடினம் : சட்டதிட்டங்களை கடை பிடிப்பது

====================================================================
6.

சுலபம் : தினம் தினம் கனவு காண்பது

கடினம் : கனவை நனவாக்கப் போராடுவது

====================================================================
7.

சுலபம் : வெற்றியை கொண்டாடுவது

கடினம் : தோல்வியை பக்குவத்துடன் எதிர்கொள்வது

====================================================================

8.

சுலபம் : அடுத்தவர்க்கு வாக்குறுதி குடுப்பது

கடினம் : குடுத்த வாக்குறிதியை நிறைவேற்றுவது

====================================================================
9.

சுலபம் :  தவறுகள் செய்வது

கடினம் : செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வது

====================================================================
10.

சுலபம் : முன்னேற்றத்துக்கு எது தேவை என்று பட்டியலிடுவது

கடினம் : அதை செயல்படுத்துவது

====================================================================
11.

சுலபம் :  அடுத்தவர் உதவியை ஏற்றுக் கொள்வது

கடினம் : எதிர்பார்ப்பின்றி அடுத்தவர்க்கு உதவுவது 

====================================================================
12.

சுலபம் : காதலியிடம் பலமணி நேரம் கடலை போடுவது

கடினம் : அதில் அர்த்தம் கண்டுபிடிப்பது


====================================================================
13.


சுலபம் : தங்கமணியிடம்(வீட்டம்மாவிடம்) அடிவாங்குவது

கடினம் : வலிக்காத மாதிரி காட்டிக் கொள்வது



====================================================================
14.

சுலபம் : நண்பர்களை பெருவது

கடினம் : நட்பை பேனி காப்பது

====================================================================

15. 

சுலபம் : இந்த மாதிரி மொக்கை பதிவு எழுதுவது

கடினம் : இதைப் படித்து கோவம் கொள்ளாமல் இருப்பது.

====================================================================


டிஸ்கி : நண்பர்களே பதிவு படிச்சி ரொம்ப விசயம்!!! புதுசா!!! தெரிஞ்சிருக்குமே...., கண்கலங்குறது தெரியுது..., எனக்கு புகழ்ச்சி பிடிக்காது.., அதனால ஓவரா புகழ வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

August 27, 2010

பூக்குழி வீடியோ கிளிப்

முஸ்கி : அதிக வேலைப்பளு காரணமாக எழுத நினத்ததை எழுத முடியவில்லை... நம்ம விஸ்வனாதன் ஆனந்த்... விஷயமாக காரமாக எழுத ஆரம்பிச்சி, பாதில அப்படியே ட்ராஃப்டில இருக்கு...நண்பர்கள் பலபேர் அது பற்றி எழுதிவிட்டார்கள்...அதனால் அதை விட்டு விட்டேன்...

          ஏற்கனவே எனது பூக்குழி அனுபவங்களை ஒரு பதிவா எழுதிருந்தேன். படித்து சிலர் அதன் வீடியோ கிளிப் இருந்தா போடுங்கன்னு கேட்ருந்தாங்க..., அத சின்னதா கட் பன்னி கீழே இணச்சிருக்கேன் பாத்து எப்படி ஃபீல் பண்ணீங்கன்னு சொல்லுங்க...

பூக்குழி வீடியோ கிளிப் (கீழே)

13 mb,  9 நிமிசம் நேர கிளிப்




டிஸ்கி : மக்களே வீடியோ குவாலிட்டி கம்மியாருக்குன்னோ..., ஃபைல் சைஸ் அதிகமா இருக்குன்னோ கோவப்பட்டு கும்மிராதீக..., அப்படி கோவம் வந்தா ஓட்டு போட்டு பழியத் தீத்துக்கங்க...என்ன நான் சொல்ரது...

August 23, 2010

அதிசயம்...ஆனால் உண்மை...

முஸ்கி : என்னத்தை சொல்ல நீங்களே படிச்சி தெரிஞ்சிக்கங்க...


இன்னிக்கி 5 மணிகெல்லாம் வீட்டுக்கு வந்திருங்க....வீட்லேர்ந்து தங்கமணியோட அழைப்பு... (எப்பவும் கொஞ்சம் அதட்டலா இருக்கும்,  ஆனா இன்னிக்கு அது இல்லை...)


இதுக்கு சுப்ரீம் கோர்ட்ல கூட அப்பீல் பண்ண முடியாது... அதனால...4.55 க்கே வீடு போய் சேந்தேன்...( என்னவா இருக்கும்... காலையில அஃபீஸ் கிளப்புறப்ப கூட ஒன்னும் சொல்லலியெ...பசங்க ஏதும் வீட்ல உடைச்சிட்டானுகளா..., அப்படி இருந்தா போன்லயே மாத்து விழுந்திருக்குமே.... வீடு போர வரைக்கும் ஒரே ரோசனை.). வீட்ல என் அம்மா உட்பட எல்லாரும் எங்கயோ கிளம்புர மாதிரி ரெடியா இருந்தாங்க...


வந்துட்டீங்களா...போய் குளிச்சிட்டு வாங்க..பாத்ரூம்ல டவல், வேஷ்டி சட்டை எடுத்து வச்சிருக்கேன்...சீக்கிரம் வாங்க...( இன்னிக்கி வீட்ல எல்லாம் தலைகீழா நடக்குதேன்னு, எனக்கு ஒரே ஆச்சர்யம்... ஒரு நாள் டவல் எடுக்க மறந்து போய், எடுத்து குடுக்கச் சொன்னதுக்கு... நான் வாங்கி கட்டிகிட்டத வெளில சொன்னா ஊரே கை கொட்டிச் சிரிக்கும்.....)


சரின்னு குளிச்சி, வேஷ்டி சட்டை போட்டுகிட்டு வந்த...நேரா பூஜை ரூமுக்கு வரச் சொன்னாக...(ஏதும் அடிக்குரதுன்னா அங்கெல்லாம் கூப்பிட மாட்டாகளே... இன்னிக்கி ஏதும் புதுவிதமா பூஜை பன்னப்போராகளா...!!!) , அங்க போனவுடனே கைல குங்கும கிண்ணத்தையும், கொஞ்சம் உதிரியா பூவையும் கைல குடுத்து.......


ஆச்சிவாதம் பன்னுங்க மாமான்னு பொசுக்குனு கால்ல விந்துரிச்சி வூட்டம்மா..., எனக்கு ஒரு செகண்ட் என்னையே நம்ப முடியலை...ஆனியடிச்சா மாதிரி நின்னுட்டேன்..எங்கம்மா என்னடா அவ கால விழுந்திருக்கா...அவள தூக்கி விடமா செவனேன்னு நின்னுட்டிருக்கேனு சொன்ன சவுண்ட் கேட்டு, சுய நினைவு வந்து... எழுப்பி பூ தூவி நல்லா தீர்க்காயுசா இரும்மா, தீர்க்க சுமங்கலி பவ’னு சொல்லி, நெத்தியில பொட்டு வச்சி..., அப்புறம் தாலிய தூக்கி காட்டினாங்க அதுலயும் பொட்டு வச்சி... ம்ஹூம் , நடக்குறது... நெசமா... இல்லை கனவான்னு ஒரு வாட்டி கையக் கிள்ளி சரி பாக்க வேண்டியதாப் போச்சி...


எனக்கெல்லாம் ஒரே சந்தோசம்... ஆகா, இந்த கடவுள் இருக்காரே... அவருதான் நம்ம கஷ்டத்தை புரிஞ்சி பாவப்பட்டு... இனிமே உம்புருசரை திட்டாம, அடிக்காம நல்லபடியா கவனிச்சுக்கோன்னு... வீட்டு அம்மனி கனவுல வந்து சொல்லிட்டார் போல,  ராஸ்கல்ஸ் இனிமே யாராவது..., நாத்திகம்... கீத்திகம்னு பேசுனா.. அவ்வளவுதான்... பிச்சிரவேண்டியதுதான்னு முடிவெடுத்தேன்...


அப்புறம் கூட கோவில்லுக்கு போய் சாமிக்கி அர்ச்சனை பண்ணிட்டு அங்க குடுத்த சேமியா உப்புமா...( என்ன உப்புமான்னு கேட்டா வழக்கமா வெண்பொங்கல்தான் குடுப்போம் ...இன்னிக்கி உப்புமானு சொன்னாங்க..), வாங்கி சாப்டுட்டு... வீடு வந்தோம்....


எனக்கு ஒன்னும் மட்டும் புரியவே இல்லை..., ஏன் இன்னிக்கி நமக்கு இவ்வளவு மரியாதை...அன்பு பாசம் ஒரே தூக்கலா இருக்கே...இனிமேட்டு இப்படித்தானா..., கடவுள் உண்மையாலுமே நம்ம மேல கருணை காட்டிட்டாரா..., ஏன் எதுக்குன்னு கேட்டு, எதுக்குப் பிரச்சினை,  சந்தோசத்தை கொண்டாடுவோம்னு விட்டுட்டேன்..


மறுநாள் காலையில ஆஃபீஸ் கிளம்பும் போது, தங்ஸ்கிட்ட இன்னிக்கும் சீக்கிரம் வரனுமா.. 4 மணிக்கெலாம் வந்துரட்டுமான்னு கேட்டேன். என்னது 4 மணிக்கி வீட்டுக்கா...அப்புறம் ஆஃபீஸ் வேலைய உங்க தாத்தா வந்து பாப்பாரா..., வீட்ல வந்து என்னத்த கிழிக்கப் போறீங்கன்னு பதில் வந்துச்சி...


நானும் விடாம..., இல்லை நேத்திக்கி 5 மணிக்கெல்லாம் வரச் சொல்லி என் கால்ல விழுந்து ஆசீர் வாதம் வாங்ககினியே.. அதான் இன்னிக்கும் வரனுமான்னு கேட்டேன்னு சொல்லி வாய் மூடலை..., அம்மனி முகமெல்லாம் கோவத்துல செவந்து போச்சி, என்னது போனாப் போகுது எல்லாரும் சொல்ராங்களே, இந்த மகளிர் புக்லேயும் போட்ருக்காங்களே.. ”வரலட்சுமி நோன்பு” அன்னிக்கி விரதம் இருந்து புருசன் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குனா நல்லதுன்னு பண்ணா, துறைக்கி தினமும் விழனுமோ..., ஒரே அர்ச்சனை...,


விட்டாப் போதுனு ஆஃபீஸ் ஓடுனவந்தே....அன்னிக்கி நைட் 10 மணிக்குதான், பூனை விட்ல நுழையுராமாதிரி நுழைஞ்சேன்...


பாவிப் பயபுள்ளக இந்த “வரலட்சுமி” நோன்ப வருசமெல்லாம் கொண்டானும்னு சொல்லிவச்சிருந்தா எவ்வளவு நல்லாருக்கும்...


ம்ஹ்ஹூம்... நாம வாங்கி வந்த வரம் அப்படி... வேரென்னத்த சொல்ல...


வாழ்க வரலட்சுமி...  ஓங்குக வரலட்சுமி புகழ்...


டிஸ்கி 1 : அன்பான சக ரங்கமணிகளே..., உங்க வீட்டு தங்க்ஸும் ...உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கினாங்களா???. அப்படி இல்லைனா, அது அவங்க நாலெட்ஜுக்கு வராம இருந்தா... இந்த வரலட்சுமி நோன்போட மகிமைய அவங்களுக்கு சொல்லுங்க..., அந்த ஒரு நாளாவது நமக்கு இனிய நாளா அமையும்.

டிஸ்கி : அதிசயம் நிகழ்ந்த நாள் : 20-08-2010, வெள்ளிக் கிழமை.

August 20, 2010

சென்னை வந்துட்டேன்....+1 சேந்துட்டேன்...

முஸ்கி : நண்பர்களே....கம்மியான விசயத்த மட்டும் தான் எழுதிருக்கேன்...எழுதுனதுல அரைவாசி குறைச்சிட்டேன்...அப்பவும் பதிவு நீளமாத்தான் தெரியுது..., சரி உங்க தலையெழுத்து படிங்க..
                எருமை மாடு மேய்க்கப் போய், ஸ்கூலுக்கு போகாம நாலாப்பு பெயிலாகி, மறுக்கா நாலாப்பு போக ஆரம்பிச்சதுலேர்ந்து, அங்கயும் ஒரு செட் சேந்து, ஸ்கூல் போறது வழக்கமாயிருச்சி. வாத்தியார்களும் படிக்கச் சொல்லி ரொம்ப தொந்தரவு தர மட்டாங்க, என்ன பதிலுக்கு ரொம்ப கூச்சல் போட்டு அவங்கள தொந்தரவு பண்ணகூடாது, ஆனாலும் அந்த டீல் எங்களுக்கு ரொம்ப பிடிச்சது.
              நல்லா படிச்சா, இவங்க மாதிரி வாத்தியாகலாம்ன்ற அளவுக்குதான் அன்னிக்கு தெரியும்,  மத்தபடி படிக்க போறது அங்க போயி கூட்டாளிகளோட கும்மாளம் போடுறதுக்குதான். ( வீடலயும் இருக்க விட மாட்டாங்க , அப்படி விட்டாலும், அந்த ஒன்னாப்பு வாத்தி, நாலு பெரிய பசங்கள கூட கூட்டிகிட்டு வந்து அலேக்கா ஸ்கூல் தூக்கிட்டு போயிரும்...)
             ஒருவழியா அஞ்சாப்பும் படிச்சி பாசாகி!!!, பெரிய பள்ளிகூடம் சேக்குரதுக்கு அப்பாகூட போனேன், 50 அடி தள்ளி கல்லு கட்டிடம் (ஜெயா டீவில காலச்சுவடுகள்ல இந்த கட்டடத்தை பத்தி சொன்னாங்க, அப்புறம் தெக்கத்தி பொண்ணுனு எங்கூரு பாரதிராசா எடுத்த சீரியலுல, இத ஜெயிலா யூஸ் பண்ணிருக்காங்க...), ஆனாலும் சின்ன ஸ்கூல்லேர்ந்து டிசி வாங்கிட்டு போய் புதுசா சேக்கனும்.
             ஆறாப்பு ஃபீஸ் 5 ரூவா 55 காசு (இப்ப 75 ரூவாக்கு மேலயாம், சொன்னாங்க),  இது அதிகமாருக்குன்னு எங்கப்பா சண்டை போட , அதுவரையிலும் சும்மாருந்த மத்தவங்களும் ஃபீஸ் குறைக்கச் சொல்லி ஆரம்பிக்க, ஒரு வாத்தி எங்கப்பாவ தனியா கூப்பிட்டு, பையனை விட்டுட்டு போய் தோட்ட வேலைய கவனி சாமி, ஃபீஸ நான் கட்டிக்கிறேன்னு அனுப்பிட்டாரு.( அத பத்து நா கழிச்சி,  தோட்டத்துல எடுத்த பருத்திய யாவாரிக்கு போட்டு என் கிட்ட 5 ரூவா 60 பைசாவா குடுத்தனுப்புனாரு, அதுல எனக்கு 5 பைசா லாபம் )
            பெரிய பள்ளிகூடம் வந்ததுக்கப்புறம் என்னை ஒழுங்க படிக்கச் சொல்லி வாத்திங்க தொந்தறவு அதிகமாயிருச்சி, ஏன்னா எங்கண்ணே நல்லா படிச்சி ஸ்கூலுக்கு பேர் வாங்கித் தந்துருக்காராமாம், நான் வந்து அத கெடுத்துரகூடாதாமாம்..., எப்படா ஒன்னுக்கு விடுவாங்க, எப்ப மதியம் வரும், எப்ப சாயந்திரம் ஸ்கூல் விடுவாங்கண்ணு ஏக்கமாருக்கும்... இப்படியே ஆறாப்பு டூ எட்டாப்பு, வாழ்க்கயோட இருண்ட காலமா போச்சி.
ஒன்பதாப்பு போனா அங்க ஒரு இருபது தடிமாடுங்க பெயிலாகி கூட்டமா உக்காந்திருக்குதுக..., எட்டாப்பு வரைலும் பாஸ் போட்ருவாங்க, பத்தாவது பப்ளிக் தேர்வுல கெட்டபேர் வதுரக் கூடாதுன்னு ஒன்பதாப்பு ஒழுங்க படிக்கலைனா பெயிலுதான். என்னோட பத்தாப்பு போட்டோல , மேல் வரிசைல இருக்கிற முக்காவாசி பரதேசிக இந்த குருப்புதான்.
            ஒன்பதாப்பிலேர்ந்து வாத்தியெல்லாம் காலேஜ் படிச்சிட்டு வந்தவங்க, இவங்க சொல்லி குடுத்ததுக்கு அப்புறம்தான் படிப்பு புரிய ஆரம்பிச்சி அது அவ்வளவு கஷ்டம் இல்லைனு தெரிஞ்சி, யார் அதிகமா மார்க் வாங்குறதுன்னு போட்டி ஆரம்பிச்சது, பரிசெல்லாம் அவங்க சொந்த செலவுல குடுப்பாங்க...(இன்னிக்கும் 9,10 படம் சொல்லிதந்த வாத்திக தொடர்பு இருக்கு, போய் பாத்தா அம்புட்டு சந்தோசப் படுவாங்க.. இப்ப அவங்க வேலை பாக்குர ஸ்கூலுக்கு வரச் சொல்லி அங்கிருக்குரவங்களுக்கு அறிமுகம் செஞ்சி சந்தோசப்படுவாங்க).
         இப்ப எல்லா அம்மனிகளும் தாவணி போட ஆரம்பிச்சாச்சி..., எஙகளுக்கும் அவங்கள பாக்குரதுல சின்னதா ஒரு இது ஆரம்பிச்சிருச்சி..., பாக்குரதுக்கு புதுசா தெரிய ஆரம்பிச்சாக, படிப்பு மூலமா, இல்லைனா, வேறெதாவது பண்ணி அவங்கள நம்ம பக்கம் திரும்பி பாக்க வைக்கனும்ண்ற எண்ணம் புதுசா வந்து சேந்தாச்சி பெரியபசங்கெல்லாம், பேண்ட் போட ஆரம்பிச்சானுக, நானும் வீட்ல கேட்டேன், முடியாது பத்தாவது முடிச்சதுக்கபுரம் தச்சிக்கலாம்னு சொல்லிட்டாங்க, அப்பதான் வேஷ்டி கட்ட பழக ஆரம்பிசது (இன்னிவரைக்கும் வேஷ்டிதான் என்னுடைய ஃபேவரைட்..)
          ஒரு வழியா ப்ப்ளிக் பரிட்சை முடிஞ்சி ரிஸல்ட் வந்துச்சி ஸ்கூல்ல நா 3வது, என்ன விட ரெண்டு நாதாரிக மார்க் கூட வாங்கிட்டாக.. அவமானமாப் போச்சி... ஆனாலும் நல்ல படிச்சி சென்னைல இருந்த அண்ணனுக்கு, நான் இவ்வளவு மார்க் எடுத்தது பெரிசா பட்ருக்கு. லீவ் போட்டுட்டு வந்து, சென்னைல எங்கூட இருந்து படிக்கட்டு, இங்கிறுந்தா தோட்டம் தொறவுண்ணு சரியாப் படிக்க மாட்டான்னு வீட்ல சொல்லிட்டு போய்ட்டாரு.
          போய் அயனாவரத்துல ஒரு ஸ்கூல்ல அட்மிஸனுக்கு சொல்லி வச்சிட்டு, பக்கத்துலே ஒரு வீடு பாத்துட்டு, ஊருக்கு வந்தாரு. நானும் இருக்குர நாலு டவுசர்,சட்டை , கூட நாலு வேஷ்டினு மோட்டை கட்டி கிளம்பிட்டேன். சென்னை போற பிரவேட் பஸ்ல கலர் டீவில ப்டம்போடுவாங்கன்னு சொல்லிருந்ததால...ஒரே குஷியா இருந்துச்சி... ஒருவழியா குடும்பத்தோட வந்து என்னயும், அண்ணனையும் பஸ் ஏத்திவிட்டாங்க..., பஸ்ல ஏறி உக்காந்ததுலேர்ந்து எப்ப படம் போடுவாங்கண்னு எங்கண்ணாகிட்டே கேட்டுகிடே இருந்தே...’டேய் பேசாம உக்காருடா..இன்னும் பஸ் ஸ்டார்ட் பண்ண்வே இல்லை.. சும்மா தொன தொனன்னுகிட்டு”னு அதடிட்டாரு...
         பஸ் கிளம்பி பெரியகுளம் தாண்டினவுடனே படம் போட்டாங்க, முதல் படம் ”உலகம் சுற்றும் வாலிபன்”, 2-வதா ”நேற்று இன்று நாளை”,  ரொம்ப சந்தோசமா இருந்தது...
         வந்தாச்சி,  பட்டிகாட்டுலேர்ந்து சிங்கார சென்னை பட்டணத்துக்கு..., வடைகை வீடு (1 ரூம், 1 சமயலறை) ரூ 500 சின்னதா இருந்தது, எங்கூருல ரூ 50-க்கு பெரிய வீடே பெரிய வீடே வாடகைக்கு கிடைக்கும். “நாளைக்கு ஸ்கூல் போகனும் அட்மிஸன்..இருக்குறதுல நல்ல சட்டையும் டவுசரும் எடுத்து வச்சிக்கட” நு அண்ண சொன்னாரு..நான் வளந்துட்டேன், டவுசர் கூச்சமா இருக்கு வேஷ்டி கட்டிக்கிரேன்னு சொன்னேன், சரின்னுட்டாரு...
          காலையில எந்திரிச்சி, உப்புமா கிண்டி சாப்டிட்டு...ஸ்கூல் கிளம்பினோம்..., அங்க பெரிய கூட்டம்... அங்க பசங்கள்ளாம், வித விதமா பேண்ட் சட்டை போட்டு கலக்கலா வந்திருந்தாங்க...பொம்பள பசங்கள பத்தி சொல்லவே வேணா...நான் ஒவ்வொருத்தரையும் வேடிக்கை பாத்துட்டு இருந்தேன்... அவங்க ஒட்டு மொத்தமா என்னயே பாத்திர்டிருந்தாங்க..., இதுல அம்மனிக ரொம்பவே என்னை பாக்குரதும்...அதோ அவங்களுக்குள்ள பேசிக்கிரதுமா இருந்தாங்க...எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சி...நம்ம அழகுல மயங்கிட்டாங்க போல... இனி வர்ற நாள்ல இவங்கள எப்படி சமளிக்கிரதுன்னு ஒரே ரோசனையா இருந்துச்சி...,
           எங்கண்ணங்கிட்ட சொல்லி பாத்தியாண்னா எல்லோரும் என் பெர்சனாலிட்டிய பாத்து என்னையே பாக்குராங்கன்னு சொன்னேன். அதுக்கு அவரு “மண்ணாங்கட்டி நீ ஒருத்தந்தான் வேஷ்டி கட்டிகிட்டு வந்துருக்கே,  ஏதோ பட்டிகாட்லேர்ந்து நேரா இங்க வந்துருக்கானு பாத்திட்டிருப்பாங்க”, வெளில மாட்டு வண்டி பார்க் பண்ணிருக்காங்களான்னு பேசிட்டிருப்பாங்க... ரொம்ப பெருமை பட்டுக்காதேன்னு, என் நினைபுல ஒரு வண்டி மண்ணள்ளி போட்டாரு...
             எங்கல கூப்டவுடனே ஹெட்மாஸ்டர் ரூமுக்கு போனோம்... அவரும் என்னை ஒருமாறிப் பாத்தாரு... இங்லிஷ்ல ஏதோ கேட்டாரு...நன் ..ஒன்னும் புரியாம எங்கண்னனை பாக்க..பேர் என்னானு கேக்குரார்டா, காலையில சொல்லித்தந்தது மறந்து போச்சானு முறைச்சாரு (ஹெட்மாஸ்டர் இங்லீஷ் வாத்தியாரு..அவரு ”வாட் இஸ் யுவர் நேம்”னு கேப்பாரு , அதுக்கு நீ ”மை நேம் இஸ் jey” னு பதில்சொல்லுனு, நாலு வாட்டி சொல்லி மனப்பாடம் பண்ணச் சொல்லிருந்தாரு).. கடைசில அவரே என் பேரச் சொன்னாரு..ஹெட் மாஸ்டருக்கு புரிஞ்சி போச்சி..., தமிழ்ல கேக்க ஆரம்பிச்சாரு..., போகும்போது சரி இன்னிக்கி வேஷ்டி கட்டிட்டு வந்தே சரி , அடுத்து வரும் போது பேண்ட் சட்டை போட்டுட்டுதான் வரனும்...இங்க வேஷ்டி அலோவ்டு கிடையாது, ஆனா ஒன்னு போடுர ட்ரஸ்ல மட்டும் சென்னைப் பையனா மாறினாப் போதும்...மத்தபடி பழக்க வழக்கத்துல நீ பட்டிகாஅடாவே இரு, இங்கிருக்கிர பசங்க கூட சேந்து அவங்க மாதிரி மாறிடாதேன்னாரு.(அண்ணெ பெரிய ஸ்கூலா இருக்கு, எப்படி என்னச் சேத்தாங்கன்னு கேட்டேன், பாவம்... இதுக்குன்னு ஒருமாசம் அலஞ்சி ஸ்ட்ராங் ரெகமெண்டேசன் பிடிச்சிருக்காரு..)
          பாவம் அவருக்குத் தெரியாது...இதுவரை எனக்கு பேண்ட் தைச்சதே இல்ல...போட்டு பழக்கமே இல்லைனு..., ஃபீஸ் 240 ரூவா, எங்கூர்ல சேந்திருந்தா 19 ரூவா 50 காசு..., வீட்ல இங்க எவ்வளவு ஃபீஸ் கட்டினீங்கன்னு கேட்டா 25 ரூவான்னு சொல்லிருடான்னு என்கிட்ட சொல்லிட்டாரு...
          அன்னிக்கி சாயந்தரமே வெள்ளை சட்டை, காக்கி பேண்ட்(யூனிபார்ம்), புரசைவாக்கம் மதர்ஷால( அப்ப அது சென்னைல பேமஸாம்) எடுத்துகிட்டு, தண்டையார்பேட்டைல இருக்குற பாங்காங்க் டெய்லர் கடைக்கு போனோம் (ஏண்ணே பக்கத்துல அயனாவரத்துலேயே ஒரு கடையில துனி வாங்கி அங்கயே தைச்சிருக்கலாமேனு அண்ணங்கிட்ட கேட்டா, உனக்கு முதன்முதல்ல பேண்ட் தைக்கப் போரோம், அதான், பேமஸான, கடையில் வாங்கி, பேமஸான டெய்லர்ட்ட குடுக்குறேனு சொன்னாரு...
           அங்க போனா அண்ணனும், டெய்லரும் ஏதோ பேசிட்டிருந்தாங்க...அரைமணி கழிச்சி வந்தாரு..எண்ணன்னே இவ்வளவு நேரமாச்சி, அளவெடுக்கவே இன்னும் வரலே, நம்மூர்ல இன்னேரம் தச்சே முடிச்சிருப்பாங்கன்னு சொன்னேன். அதுக்கு அவரு...அது இல்லைடா...அளவெடுக்க பேண்ட் போட்டிருக்கனுமாம்... அதான் உன் சைசுல தச்சி வச்ச பேண்ட் தேடிட்டிருக்காங்க... வந்ததும் உன்னை அத மாட்டச் சொல்லி அளவெடுப்பாங்கன்னாரு.....ஒரே ஷேமா போச்சி...ஒரு பேண்ட் தக்கிறதுல இவ்வளவு அக்கப்போரானு.
            அந்த நாதாரிங்க ரெண்டு பேண்ட் ரெண்டு சட்டை தக்கிறதுக்கு நாலு நாள் எடுத்துகிட்டு அப்புறம் குடுத்தாங்க...எனக்குனா... முதன்முதலா பேண்ட் போடுர ஆர்வத்துல...டெய்லி எங்கண்ணா கிட்ட இன்னும் தக்கலையாமா, கேட்டியான்னு.. உயிரெடுத்துட்டேன்...
          இபடித்தான்...சென்னை வந்து ஸ்கூல் சேந்து முதநாள் போனேன்...வேஷ்டில பாத்த கோஷ்டியெல்லாம் அசந்துருக்கும் போல...இப்பயும் என்ன பாத்து ஏதோ பேசிட்டிருந்தங்க...
சென்னை ஸ்கூல் அனுபவத்தை இன்னொருநாள் எழுதுறேன்...( நீங்க ஆவலோட எதிர் பாக்கலைனாலும்....)


டிஸ்கி : படிச்சிட்டு உங்க கருத்தயும் , ஒட்டையும் போட்ருங்க...




LinkWithin

Related Posts with Thumbnails